‘ஃபேஸ்புக்கில் தொடங்கிய காதல், செல்ஃபியில் முடிந்தது!’ – ஆம்பூரில் விபரீத முடிவெடுத்த இளம் ஜோடி

ரயில் தண்டவாளத்தில் படுத்து, காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், ஆம்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த சாமரிஷிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டன். இவரின் மகன் ராமதாஸ், பெங்களூரில் கூலி வேலை செய்துவந்தார். ராமதாஸும் ஆலங்காயம் அடுத்த பூங்குளம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரின் மகள் நந்தினியும் காதலித்துள்ளனர். நந்தினி, கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். இரண்டு பேரும் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளனர்.

ராமதாஸ்

ராமதாஸ்

இருவரும் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், சேட்டிங் செய்து பேசத் தொடங்கினர். சில நாள்களில், பொதுவான தகவல்களையும் செல் நம்பரையும் பகிர்ந்துகொண்டனர். அதன்பிறகு, அவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. இதற்கிடையில், ஓராண்டுக்கு முன்பே நந்தினிக்குத் திருமணமாகியதும், கருத்து-வேறுபாடு காரணமாக கணவரை அவர் பிரிந்து வாழ்வதும் காதலன் ராமதாஸுக்குத் தெரியவந்தது.

தன்னுடைய திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்னைகளை நந்தினி எடுத்துக் கூற ராமதாஸ் அதைப் புரிந்துகொண்டார். பின்னர், இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தனர். ஆனால், வெவ்வேறு சமூகம் என்பதால் இரண்டு தரப்பிலும் அவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மதியம் 3 மணியளவில் ராமதாஸ் தன் காதலியுடன் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

தண்டவாளத்தில் கிடந்த சடலம்

தண்டவாளத்தில் கிடந்த சடலம்

ஆம்பூரை அடுத்த ஊட்டல் வனப் பகுதியில் உள்ள வீரவர் கோயிலுக்குச் சென்று திருமணம் செய்துகொள்ளப் போவதாக தன் அக்காவுக்குப் போன் மூலம் தகவல் சொல்லியிருக்கிறார் ராமதாஸ். ஆனால், அவர்கள் திருமணம் செய்துகொண்டார்களா… என்று தெரியவில்லை. இரு தரப்பிலும் நிலவிய எதிர்ப்பினால், கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளனர்.

இந்த விரக்தியில் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில், ஆம்பூர் வீரவர் கோயில் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்துக்குச் சென்று அருகருகில் படுத்துக்கொண்டனர். ரயில் வருவதற்கு முன் செல்போனில் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அந்த மார்க்கமாகச் சென்ற ரயில் மோதியதில் இரண்டு பேரும் உடல் சிதறி உயிரிழந்தனர்.

தண்டவாளத்தில் எடுத்துகொண்ட செல்ஃபி

தண்டவாளத்தில் எடுத்துகொண்ட செல்ஃபி

இன்று காலை, இரண்டு பேரின் சடலங்களையும் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார், உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *