கொரோனா வைரஸ் தாக்கம்: இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை தரமதிப்பீட்டு நிறுவனங்கள் குறைத்துள்ளன

புதுடெல்லி

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 400ஐ தாண்டியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா நோய் தொற்றுக்கு மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் மட்டும் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 275ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் தென்கொரியாவில் 8 பேரும், சீனாவில் 7 பேரும், சிங்கப்பூரில் 2 பேரும், பாகிஸ்தான், மெக்சிகோ, மொரீசியஸ் நாடுகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உலகில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 400ஐ தாண்டியுள்ளது.இந்தியாவில் 4பேர் உயிர் இழந்து உள்ளனர்.  271 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

உலகில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 76 ஆயிரத்து 600ஐ தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு  காரணமாக சர்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ளது. கொரோனாவின் பாதிப்பு இந்தியாவிலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது இந்தியாவின் பொருளாதார நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தி, வளர்ச்சியைக் குறைக்கும் என சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனங்கள் கணித்துள்ளன.

சர்வதேச தரமதிப்பீடு நிறுவனமான பிட்ச்(FITCH) முன்னர் அறிவித்த 5.6 சதவிதம் என்ற இந்தியாவின் வளர்ச்சியை 5.1 சதவிதமாகக் குறைத்துள்ளது. இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கபடுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற கணிப்பில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறைக்கப்படுவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதுபோல் மூடிஸ் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓஇசிடி) இந்தியாவுக்கான 2020 வளர்ச்சி கணிப்புகளை முறையே 5.3 சதவிகிதத்தில் இருந்து 5.1 சதவீதமாக  குறைத்துள்ளன.தற்போது உள்ள பிரச்சினைகளை சரிசெய்ய, வட்டி குறைப்பு மட்டும் போதுமானதாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஸ்டேண்டர்டு அண்ட் பூர் (STANDARD & POOR) நிறுவனம் முன்னர் கணித்திருந்த 5.7 சதவித வளர்ச்சியை 5.2 சதவிதமாகக் குறைத்துள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள், தங்களின் முதலீடுகளை தொடர்ந்து இந்தியாவில் இருந்து வெளியே எடுத்துச் செல்வது, இந்தியாவின் வளர்ச்சிக்கு பாதகமாக இருக்கும் என்று இந்நிறுவனம் கூறியுள்ளது. ஒட்டுமொத்த உலக பொருளாதாரமே, 1.5 சதவிதம் அளவிற்கு சரியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

 

 

 

News Source By Daily Thanthi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *